Search Here For More Information

புதிய தலைமுறை

புதிய தலைமுறை பார்த்துட்டுக் கருத்து(எதாவது இருந்தால்?) சொல்லுங்கன்னு பழைய தலைமுறை ஆளான என்னைக் கேட்டுருந்தார் நண்பர். ஆஹா.... நம்மை(யும்) மதிச்சு ஒருத்தர் கேக்கறாருன்னா விடலாமா? இல்லே விடத்தான் முடியுமா? அனுப்புங்கன்னு சொல்லி, அவர் அனுப்புனது எனக்குக் கிடைச்சது.

பதிவின் தலைப்பைப் பார்த்தீங்கல்லே.... அதுதான் வெளிவரப்போகும் புதுப் பத்திரிக்கை/ இதழின் பெயர். இது, இப்போ என் கையில் இருப்பது, விற்பனைக்கு அல்ல-தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற குறிப்போடு இருக்கு.

அட்டை நீங்கலா நாப்பத்தியெட்டே பக்கங்கள். ஹோட்டல் தோசை மாதிரித் தேசலா இருக்கோ? வார இதழா, மாதம் இருமுறையா, இல்லே மாதம் ஒன்றா? என்ன மாதிரின்னு இன்னும் புரிபடலை. கைக்கு அடக்கமாச் சுருட்டி வச்சுக்க வசதியா இருப்பதைப் பார்த்தால் வார இதழா இருக்கும் வாய்ப்பு அதிகம்.

திறந்ததும், லேடீஸ் ஃபர்ஸ்ட்ன்னு விளையாட்டு வீராங்கனை(?)களைப் பற்றிய கட்டுரை. ஜி.கோமளா அவர்கள் எழுதியது. அதுக்குத் தலைப்பு 'வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேரும்' ஆஹா..... செண்டிமெண்ட்டா 'டச்' பண்ணிட்டாங்க. தமிழ் சினிமாக்களில் முதல் காட்சியில் வெற்றி வெற்றின்னு கூவிக்கிட்டே வரும் நாயகனின் 'பாவம்'. Bhavam ன்னு படிங்க.

அதுக்கு அடுத்து, முக்கியமான சேதி ஒன்னு. பார்த்ததும் எனக்கு வியப்புதான். பரவாயில்லையே நம் அரசு! வசதி இல்லாதவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் 'உதவி காத்திருக்கு' கல்வி கற்பதற்கான கல்வித் தொகை. கல்விக்கான செலவே பெரும்சுமையா மாறி மனுசனை நசுக்கும் இப்போதையச் சூழலில் உதவி செய்ய சில நிறுவனங்களும், அரசும் சேர்ந்து செய்யும் இந்த உதவி ஞாலத்தின் மானப் பெரிது. உண்மையில் தகுதியானவர்களுக்கு இது போய்ச் சேரணும் என்பதுதான் என் ஆசை.

நமக்குப் பரிச்சயமான பெயர்களைப் பார்த்ததும் உள்ளம் கொஞ்சம் துள்ளுமே.... லேசான ஒரு துள்ளல். நம்ம அதிஷா, யுவகிருஷ்ணா எழுதிய எஞ்ஜினீயரிங் கவுன்சிலிங் பற்றிய ஒரு கட்டுரை. உண்மையைச் சொன்னால் இந்தக் கவுன்சிலிங்கைப் பத்துன ஒரு விவரமும் எனக்குத் தெரியாது. அதான் பழைய தலைமுறைன்னு முன்னாலேயே சொல்லிட்டேனே. அப்பப்போத் தினத்தாள்களில் கவுன்சிலிங் ஆரம்பம், ரெண்டாம் கட்டம், மூணாங்கட்டமுன்னு வரும்போதெல்லாம் அது என்னவா இருக்குமுன்னு யோசிச்சு முழிச்சுருக்கேன். இப்போ, இதைப் படிச்சதும் நல்லாவே விளங்கிருச்சு.

தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் எனக்கு, இங்கே ஒரு சினிமா விமரிசனமும் போட்டுருந்தது பற்றி வியப்பு ஏதும் இல்லை. ஆனால்....இந்தப் படத்தைப் பற்றி வலைப்பூக்களில் என்ன சொல்றாங்கன்னு கொசுறா ஒரு விவரம் தந்துருந்தாங்க பாருங்க. அது..... சூப்பர்.

கேள்வி நேரம் பகுதி. தொகுத்தவர் கவின் மலர். ஊடகத்துறை, மார்க்கெட்டிங் துறை மாணவர்கள் இயக்குனர் சீமானிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும். சினிமா, அரசியல், மொழின்னு கலந்துகட்டி அடிச்சு ஆடியிருக்காங்க ரெண்டு தரப்பும். மொழிக்கலப்புதான் மிகப்பெரிய ஆபாசமாம். சீமான் சொல்லி இருக்கார்.

சிந்தனைகள் எங்கே இருந்தும் வரலாம். அது கடவுளைப்போல! இப்போ மின்னஞ்சலில் வந்துருக்கு ரிஷி (குமார்) மூலம். இதுக்கு ஒரு ஓவியம் வரைஞ்சுருக்கார் வாசுதேவன். அட்டகாசம் போங்க.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஜி. ஐஸ்வர்யா (எவ்வளவு பொருத்தம் பாருங்க) நம்ம இளைஞர்களுக்கிடையே பெருகிவரும் சர்க்கரை நோய், மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரை.


தல சொல்லிட்டார் எப்பேர்ப்பட்ட பைக், எப்படிப் பார்த்து வாங்கணும் என்பதை. தற்கால இளைஞர்களுக்கான அடையாளங்களில் ஒன்னு பைக். ஆக்ஸசரீஸ்ன்னு வச்சுக்கலாம். விலாவரியா விஷயத்தைச் சொன்ன அந்தத் தலயின் பெயரைச் சொல்லலையே....

கவிதை ஒன்னு. நமக்கும் அதுக்கும் காத தூரம் என்பதால் எஸ்கேப்பு. ஆனா கவிதாயினி நமக்குத் தெரிஞ்சவங்கதான். உமாஷக்தி.

நட்ட நடுப்பகுதிக்கு வந்துட்டோம். அட்டகாசமா இருக்கு. நம்ம ஜனநாயகம் மக்களுக்காகத்தான் என்பதில் ஐயமே இல்லை. யாரோட கைவண்ணம்? பாராட்டுகளை அள்ளித்தர்றேன்.

பைக்கில் ஒரு பயணம். பயணக்கட்டுரை எனக்குப் பிடிக்கும். அதிலும் இது 'சரித்திர சம்பந்தமுள்ள இடம்'! ஆர்வத்துக்குக் கேக்கணுமா? எம்.பி. உதயசூரியனாம். நடையும் அருமை.

சினிமாவை விட்டுத் தொலைக்க முடியுதா? இங்கேயும் சினிமாவுக்குச் சில பக்கங்கள். ஆனால்...... நல்லவேளையா.....நடிகையின் படங்கள்,அவுங்க சொந்த சமாச்சாரங்கள் இப்படி ஒன்னும் இல்லை. தைரியமாப் படிக்கலாம். சினிமாவில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வெற்றி அடைஞ்சாங்க சில இளம் இயக்குனர்கள்ன்னு கல்யாண் குமார் எழுதி இருக்கார்.

மக்களுடைய ரசனைகள் மாறிவரும் இந்தக் காலத்தில், 'ஏதோ மக்களே நேரில் போய்க் குத்துப்பாட்டு இன்னபிற அம்சங்கள் வேணுமுன்னு தயாரிப்பாளர், இயக்குனர் வீட்டுவாசலில் தவங்கிடந்துக் கெஞ்சுறதைப்போலப் பில்ட் அப் கொடுத்துக்கிட்டுச் சினிமா என்ற அருமையான கலையைச் சீரழிக்கும் பலர் இதைக் கட்டாயம் படிக்கணும். புதிய சிந்தனையுடன் புதிய இயக்குனர்கள் வந்துக்கிட்டு இருக்காங்க. அவுங்களைப் பாராட்டத்தான் வேணும். இப்படிப்பட்டச் செய்திகள் மூலம் வாசகர்கள், திரைப்பட ரசிகர்கள் ரசனையையும் உயர்த்தலாம். எல்லாத் தொழிலையும் போல இதுவும் ஒரு சீரியஸான தொழில்.

கார்ட்டூன் ரசிகர்களுக்காக ரெண்டு பக்கச் சிரிப்புப் படம். வைரமுத்து, தன் அச்சம் தவிர்த்தது எப்படின்னு ஒரு ரெண்டு பக்கம். சுநாமியைப் பின்புலனாக வச்சு ஒரு நல்ல கதையை அருணா ஸ்ரீனிவாசன் எழுதி இருக்காங்க. கதை நாயகன் போல இன்றைய இளைஞர்கள் எல்லோரும் இருந்தால்..... புதியதோர் உலகம் செய்யலாம். தன்னம்பிக்கையுடன், நியாயம் நேர்மை நம்பிக்கைக்களுடனும் இளைஞர் சமுதாயம் ஒன்னு உருவாகணும் என்ற ஆதங்கம் படிக்கும் நமக்கும் வந்துருது.

தர்மம், நியாயமுன்னு சொல்லும் இந்த நேரத்தில், தேர்தல் முடிவுகளும், விடைத்தாள்கள் திருத்தமும், இதுக்குண்டானத் தேர்வுத்துறை ஆணையமும் மாணவர்கள் சமூகத்துக்கு ஏற்படுத்தும் மன உளைச்சல்களைப் படிச்சதும் கொஞ்சம் அரண்டுதான் போயிட்டேன். இப்படியெல்லாமா நடக்குது? மக்கள் கவனத்துக்குக் கொண்டுவந்த இல.கிருஷ்ணகுமாருக்கு நன்றி.

கணியன் பக்கங்களைப் பார்த்ததும் அசந்து நின்னேன். எல்லாமே ஓசிதானாம். கணினியில் தமிழ் எழுத என்ன செய்யலாமுன்னு விவரமாக் கொடுத்துருக்கார். வலைப்பதிவுகள், பதிவாளர்கள் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வந்துக்கிட்டு இருக்கு. இன்னும் புதுப் பதிவாளர்கள் வரணும். இன்னும் பல விஷயங்களைப் பற்றி ஆரோக்கியமான பதிவுகள் வரணும் என்று வலை உலகமே எதிர்ப்பார்ப்புகளோடு இருக்கு. இ'கலப்பையால் எளிதாக உழுது தமிழ் விதைக்க நம்ம மக்கள் முன்னுக்கு வருவாங்க. வரணுமுன்னு எல்லோரையும் போலவே நானும் நினைக்கிறேன். கடந்த அஞ்சு வருசங்களாக, இணையத்தில் தமிழில் எழுதும் பதிவர்களில் நானும் ஒருத்தி என்பதால் கணியன் பக்கத்தைக் கூடுதல் கவனத்தோடுப் படிச்சுப் பார்த்தேன்:-)

மொழி பெயர்ப்பு இலக்கியமுன்னு ஒன்னு அதிக அளவில் வேகமா வளர்ந்து வந்துக்கிட்டு இருக்கும் காலம் இது. அருமையான விஷயங்களை அவரவர்களுடையத் தாய்மொழியில் படித்துணர ஏதுவா மொழிபெயர்ப்புச் செய்யும் எழுத்தாளர்களுக்குப் புத்தக உலகில் நிறைய மதிப்பு கூடி வருவது நல்ல விஷயம்தான். அந்த வகையில் கே.ஆர்.மணியின் 'எங்கே போனது என் அல்வாத் துண்டு'க்கு ஒரு அறிமுகமும் வந்துருக்கு.

விளம்பரங்கள் இல்லாமப் பத்திரிக்கை நடத்துவது, பொருளாதார ரீதியில் ரொம்பக் கஷ்டம் என்றாலும் எல்லாத்துக்கும் அளவுன்னு ஒன்னு இருக்குல்லே? வாசகரின் வாசிப்புத் தடைபடாத வண்ணம் அட்டைகளில் மட்டுமே விளம்பரங்கள் என்னும் ஐடியா ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

பத்திரிக்கையின் அமைப்பு, லே அவுட் மற்றும் இன்னபிற டெக்னிக்கல் சமாச்சாரங்களைப் பத்தி நான் ஒன்னும் சொல்லலை. (தெரிஞ்சாத்தானே/) ஒரு சாதாரண வாசகியா, வெளிவரப்போகும் புதுப் பத்திரிக்கையை ஆழ்ந்து பார்த்துப் படிச்சு, உணர்ந்ததுதான் மேலே சொன்ன எல்லாமும். ஒன்னுரெண்டு எழுத்துப்பிழைகள் கண்ணிலே பட்டன.(நான் வேணுமுன்னா ப்ரூஃப் ரீடரா வரவா?)

எஸ் ஆர் எம் கல்விக்குழுமத்துடன் இணைந்து வரப்போகும் இந்த புதிய தலைமுறைக்கு நம்ம மாலன் அவர்கள் ஆசிரியர். இன்னும் ஆசிரியர் குழுவில் யார் யார் இருக்காங்கன்னு தெரிஞ்சால் மகிழ்ச்சியா இருக்கும். நமக்குத் தெரிஞ்ச பெயர்கள் என்றால் மகிழ்ச்சி ரெட்டிப்பாகும் சாத்தியம் உண்டு. (ஆமாம்....மாலன் அவர்கள் ஒன்னும் எழுதலையா இதுலே? )அடுத்த மாதம் முதல் இளைஞர்களுக்கான இந்த இதழ் வெளிவரப்போகிறது.

வெற்றி பெறணுமுன்னு வாழ்த்துகின்றேன்.