Search Here For More Information

The Smart I-Phones


நன்றி - புதிய தலைமுறை 
தொட்டுப் பேச வா...
அதிஷா

2011ம் ஆண்டின் இறுதியில் ஸ்மார்ட் போன்கள் உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கின. ஸ்மார்ட் போன்களோடு 3ஜியும் கூட்டணி அமைக்க, உலகம் உள்ளங்கைக்குள் அடங்கியது. அலுவலக வேலைகள் தொடங்கி, அட்ரஸ் கண்டுபிடிப்பதுவரை மொபைல் போனில் செய்து முடித்துவிட முடியும் என ஐந்தாண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இந்தப் புரட்சிக்கு வித்திட்டது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும் ஐபேடும்தான். யூ ட்யூப், ஃபேஸ்புக், டுவிட்டர், ஜிமெயில் இந்த நான்கும் மொபைல் போன் பயன்பாட்டினை புரட்டிப் போட்டன. அதை கச்சிதமாக முதலில் கண்டுபிடித்து, பணத்தை அள்ளியது ஆப்பிள்.

2011ல் காலமான ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், மொபைல் பயன்பாட்டின் அத்தனை சாத்தியங்களையும் முயற்சி செய்துபார்த்தார். அதை பொழுதுபோக்கு தவிர, அனைத்துத் தரப்பினரின்  தினசரி உபயோகத்திற்கான  கருவியாக மாற்றிக் காட்டினார். ஸ்மார்ட் போன்கள் நவீன உலகில் தவிர்க்க முடியாத சங்கதியாயின.

ஆப்பிள் புயல், மொபைல் உலகத்தை நிறையவே அசைத்துப் பார்த்தது. ஆப்பிளை சமாளிக்க உலகெங்கும் உள்ள மற்ற மொபைல் நிறுவனங்களும் அதற்கு இணையான ஸ்மார்ட் போன்களை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்தன. நோக்கியா, சோனி மாதிரியான ஜாம்பவான் நிறுவனங்கள்  இந்த ஸ்மார்ட் போன் புயலில் சிக்கி, அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் கடுமையாகப் போராடின. ஐபோனுக்குப் போட்டியாக கூகுள் களமிறக்கிய ஆன்ட்ராடு இயங்குதளம் சக்கைபோடு போட்டது. குறைந்த விலை, ஆப்பிளுக்கு இணையான தரம்... வளரும் நாடுகளின் விலையுயர்ந்த ஐபோன் வாங்க முடியாத நடுத்தர வர்க்கத்தினர், மலிவான ஆன்ட்ராடுகளை இரு கரம் நீட்டி வரவேற்றனர். ஆன்ட்ராட் போன்கள் விற்றுத் தீர்ந்தன.

இந்த ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த, விளையாட, பாட்டு கேட்க, படம் பார்க்க, இணையத்தில் உலவ, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த, பேப்பர் படிக்க, வழிசொல்ல என்று லட்சக்கணக்கான அப்ளிகேஷன்களை உலகெங்கும் யார்வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்கிற நிலை உருவானது. அது, பலருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தது. எளிமையாக வீட்டிலிருந்தபடியே பலரும் அப்ளிகேஷன்களை உருவாக்கி, ஆயிரக்கணக்கில் சம்பாதித்தனர். அத்தொழில், 2012ல் சூடுபிடிக்கப் போவது நிச்சயம்.

தற்போது, ஸ்மார்ட் போன்களுக்கான போட்டி, நோட்புக் அல்லது டேப்லெட் எனப்படும் கையடக்க தொடுதிரைக் கணினியின் வடிவில் வந்திருக்கிறது. ஐபோனுக்கு போட்டி ஐபேட் தான்! டேப்லெட் சைஸில் மொபைல் போன்களும் மொபைல் போன் சைஸில் டேப்லெட்களும் நிறைய சந்தைக்கு வரும்.

2012ம் ஆண்டில், மொபைல் நிறுவனங்களுக்கிடையே நடைபெறவுள்ள சிறந்த உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பிற்கான போட்டி, வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தொழில்நுட்பங்களை பெற்றுத்தரப் போகிறது. அதற்கு முத்தாய்ப்பாக அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே மைக்ரோசாஃப்டிலிருந்து விண்டோஸ் 8, பிளாக் பெர்ரியிலிருந்து நியூஜெனரேஷன் இயங்குதளம், ஆன்ட்ராடிலிருந்து ஐஸ்க்ரீம் சான்விச் என எக்கச்சக்க வசதிகளோடு மொபைல் போன்கள் வரவிருக்கின்றன. அதோடு,  QWERTY  R  கீபோர்டுகள் கொண்ட மொபைல் போன்கள் வழக்கொழிந்து, இனி எல்லாமே தொடுதிரைதான் என்கிற புது டிரெண்டும் உருவாகும் அல்லது தொடுதிரையோடு கீபோர்டும்.

மொபைலில் தமிழ் 2011லேயே சாத்தியமாகியிருந்தாலும், 2012ல் ஸ்மார்ட் போன்களின் உதவியோடு முழுக்க முழுக்க தமிழில் எஸ்எம்எஸ் அனுப்புவதில் தொடங்கி இணையம், பயன்பாடு, சமூக வலைத்தளங்களில் செய்திப் பரிமாற்றம் என எல்லாமே தமிழாகும் வாய்ப்புகள் நிறைய உண்டு.

சென்ற ஆண்டு, மொபைல் போன்கள் பல்முனைப் பயன்பாட்டுக் கருவியாக மாறிய நிலையில்,  ஆபீஸர்ஸ் மொபைலாக இருந்த பிளாக்பெர்ரி, தன்னுடைய மார்க்கெட்டை பெருமளவில் இழந்தது. 2012ல் பிளாக்பெர்ரி, அலுவலக வேலைகளை முழுமையாக செய்யக்கூடிய மொபைல் போன்களை களமிறக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 4எஸ் சக்கைப் போடு போட்டாலும் சத்தமே இல்லாமல் உலக மார்க்கெட்டில் 50 சதவிகிதம் ஸ்மார்ட் போன் மார்க்கெட்டைப் பிடித்துள்ளது ஆன்ட்ராட். அது, 2012ல் மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். மொபைல் போன் தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள், சிறந்த ஸ்டார்ட் போன்களை குறைந்த விலையில் வழங்கினாலும் சர்வீஸில் சொதப்பின. அதை, இந்த ஆண்டு சரிசெய்யும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் சமூக வலைத்தளப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இது, மொபைல் சந்தையில் மிகப் பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

மொபைலில் கேம்ஸ் ஆடுவது விளையாட்டுக் காரியமல்ல என்பதை 2011 உணர்த்தியது. ஆன்ட்ராட் மொபைலில் வெளியான ஆங்கிரி பேர்ட்ஸ் ஒரு நல்ல உதாரணம். கோடிக்கணக்கானோரைக் கவர்ந்ததோடு, மொபைல் போன்களில் கேமிங் துறைக்கான சந்தையை உருவாக்கித் தந்துள்ளது. இந்த ஆண்டு புதுவிதமான மொபைல் கேம்களை விலைக்கு வாங்கி உபயோகிக்கும் அளவுக்கு வளரும். அதைத் தயாரிக்கவும் விற்கவும் புதிய சந்தை உருவாகும் என கணிக்கின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால், 2012ல் மொபைல் பயனாளர்களுக்கு இனிமையான ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.